மோனத்தைக் காட்டும்,பூசை முறைகள்,
எந்தச் சைவ ஆலயங்களிலும்மில்லாத பூசை முறை ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்திலே பக்தியோடு நடை பெறுகின்றன.சைவம்,வைஷ்ணவம்,சாக்தம் என்ற திரிகரண முறையில் காரியங்கள் நடைபெறுகின்றன.சைவமுறையின் தியான அனுட்டானங்களுடன் விபூதி பூசப்படுகின்றது.வைஷ்ணவ முறையில் குங்குமத்தால் நாமக் கோடு இடப்படுகின்றது.சாக்தம் என்ற சக்தி வழிபாட்டு முறையில் வாசனைத் திரவியங்களால் தாயாரிக்கப்படும் 'பண்டாரம்' எனும் மஞ்சள் பொட்டு வைக்கப்படுகின்றது.சிவன்,விஷ்னு,சக்தி,என்ற மாகாதெய்வங்களின் சிறப்புக்களுடன் தோன்றிய ஆலயத்தின் தொன்மை மிகவும் நீண்டது.இந்து மதத்திலுள்ள அதி உயர் சக்தி மிக்க தெய்வங்களின் சிறப்பு மிக்க கீர்த்தி மிகு,இல்லமே ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயமாகும்.
மனிதர்களை வணங்கும்
மனிதர்களை பூஜிக்கும் மகாசக்தி ஆலயம்.
ஆலயங்களில்,தெய்வங்களைத் தவிர வேறு யாரையும் கை கூப்பித் தொழக் கூடாது,வீழ்ந்து வணங்கக் கூடாது,பணிந்து வணங்கக் கூடாது,பாதம் தொழக்கூடாது என்பது ஆகம நடைமுறை ஆனால்,ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தில் பெருன்பான்மை கிரியைகள் மனிதர்களுக்கே நடைபெறுகின்றன.
பூசாரிமார் முதல் குருக்கள்மார் வரை செய்கின்ற காரியப் பூசைகள் பெரும்பாலும் பாண்டவர் வேடம் பூண்டு கட்டுக்கு நிற்கும்,மனிதர்களைப் பூஜிக்கும் காரியமாக அமைகின்றன.இப் பூசைகள் எல்லாம் மக்கள் மனத்திருப்தியுடன் சிறப்பாக நடைபெறுகின்றன.
பண்டார பொட்டு,பகட்டாக இட்டு,பண்பாட்டை காட்டு.
பண்டாரம் எனும் பெயர் கொண்ட மஞ்சள் நிறத்திலகம் இடுவது மாகாசக்தி ஆலயமான ஸ்ரீ திரொபதையம்மன் ஆலயத்தில் சிறப்பு.வாசனைத்திரவியங்களாலும்,வைத்தியமூலிகைகளாலும் தயாரிக்கப்படும்,மஞ்சள் வஸ்து வான பண்டாரம் எனும் இப் பொட்டு மக்களின் மேன்மைக்கு வழிகாட்டுகிறது.அம்மை நோய் தீர்க்கும் இவ்வஸ்து இடுபவர் மனங்களில் மகிழ்ச்சியும் தெய்வத்தன்மையும் ஏற்படுத்துகின்றது.லஷ்மி கடாட்சம் பொருந்திய பண்டாரம் இடுவதால் வறுமை,துன்பம்,பேய் பிசாசு,பீடை என்பன அகலும் என்பது பண்டு தொட்டு வந்த உண்மையாகும்.ஆண்,பெண்,இருபாலாரும்,வயது வித்தியாசமின்றி விருப்போடு ஆலயத்தில் இட்டுக் கொள்வது பண்பாட்டுக் கோலமாகும்.அது பரி பக்குவ நிலையுமாகும்.மகாசக்தியின் அருட்பிரசாதமான இத்திலகம் கிழக்கில் எந்த இந்து ஆலயத்திலும் இல்லாததொன்றாகும்.
மடி ஏந்திப் பிச்சை கேட்டு
மண்டியிட்டுச் சோறு வாங்கும்
மண் குலப் பெண்டீர்,மகிமையோ அழகு
மாலை வேளைப் பூசை மிகவும் சிறப்பானது.பாண்டியூர் மக்கள் முதல் பக்கத்தூர் மக்கள் வரை மகிழ்வோடு கண்டு களிக்கும் பூசை,பூசையை அடுத்து கட்டுக்கு நிற்கின்ற கொலுவினர் அனைவரும் விரதம் முடித்து,ஒரு வேளை உணவை உவப்போடு சாப்பிடும் வேளை,ஐவராசாக்களிடம்,பேய்கள் பூதங்கள்,பறவைகள்,மிருகங்கள்,புளுக்கள் எல்லாம் முற்பிறப்பில் தேவகர்ந்தவர்களாக இருந்து சாபத்தால் இன்னிலை அடைந்தமையினால்,சாப விமோசனம் பெறவும்,முக்தி நிலையடையவும் மடிப்பிச்சை வாங்கி சாப்பிடல் என்ற கோட்பாட்டிலும்,அல்லது காட்டில் வாழ்கின்றவற்றுக்கெல்லாம் பாண்டவர்கள் வனவாச காலத்தில் உணவளித்துச சாப்பிட்டார்கள் என்ற தத்துவ அடிப்படையில் தோன்றிய நற்கருமம்,இதனை பொதுமக்கள் நேர்த்தி வைத்து,அரிசி,காய்கறி அமுதுங்களித்து மடிப்பிச்சை கேட்டு மடியேந்தி பிச்சை வாங்கி உவப்போடு சுற்றம் சூழக் கொடுத்து உண்ணும் போது தேவாமிர்தமாக இருக்கும்(இச் செயல் பாண்டர்களாக இருக்கும் கொலுவினருக்கு மிகவும் பொறுமை பேணும் களமாகவும் இருக்கும் பகல் முழுவதும் விரதமிருந்து பூசை காரியங்களில் ஏற்பட்ட களைப்பு வேறு,பாண்டவ நிலை,என்பது இங்கே கோடியிட்டுக் காட்டப்படுகின்றன).
மாணிக்கப் பிள்ளையாரின் ஆலயத்தில்
மகா சக்தியின் மகிமை காணீர்
ஏழாம் நாளில் எடுப்பாய் ஓர் விழா
ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தில் கொடியேற்றம் செய்து ஏழாம் நாள் கண்ணன் அத்தினாபுரம் வரல் என்ற நிகழ்ச்சி "சுவாமி எழுந்தருளல்" என்ற பேரேடு எடுப்பாய் நிகழும்.அத்தினாபுர எல்லை எனக் காட்டும் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாண்டவர் வேடம் பூண்டவர்களால்,பல்லக்கில்(தேரினில்)உபசாரங்களால் தூக்கி வருவதும்,அன்றைய நிகழ்வில் ஓர் அம்சமாக திரௌபதி கண்ணனிடம்,தன்னிலை எண்ணிக் கதறுவதாக அழைப்பதான ஓர் பேரின்பக்காட்சி நிகழும்,திரெளபதியாக வேடம் பூண்ட விரதகார அன்பருக்கு மந்திர உச்சாடனங்கள் செய்து தெய்வமாட உருவேற்றித் தோத்திரங்கள் செய்து ஆடவைப்பர் உருவேற நேரமெடுக்கும்,இக்காலமே துரியோதன் சபையில் துர்ச்சாதனன் துகில் உரிந்த நிலையில் அந்நிலையில் ஒரு கையால் தன்னை காத்துக் கொண்டுகதறிய திரௌபதி,இரண்டு கைகளையும் நீட்டி பூரணசரணாகதியடைந்ததும்,கண்ணன் வந்ததாக உள்ள ஐதீகத்துக்கு கேட்ப நேரமெடுக்கும்,அதன் பின்னரே திருவேறி உருவேறும்,தெய்வமாடுவார் திருவாக்குக் கொடுப்பார்.எட்டாம் நாள் அதிகாலை ஒரு சுப நாள்,எடுக்கும் ஒரு நாட்கால் வெட்டல்,கட்டுக்கு நிற்போர் தீப்பாய அதுவே கரு.உடம்பு சுயமாக இயங்குவதில்லை,ஆத்மா இந்த பூவுலகில் வாழும் போது மோட்சப் பேறுக்காக,உடம்புக்கு உதவுகின்றது.தானம் தவங்கள்,விரதாதிகளினால் புனிதமடைந்து எப்போதோ வரப்போகும் மோட்சத்திற்காக,அது நற்காரியங்கள் செய்து,மோட்சத்திற்கு நன்மை சேர்ப்பது போல,எப்போதோ மூட்ட வேண்டிய தீக்கு இப்போது சுப நாள் கட்டை வெட்டப்படுகிறது.
பந்தல கால்,அது கலியாணக்கால் பணிக்கனா
குடியாரின் பண மிதப்பு,வந்து சூடும் அடியார்களின் சிறப்பு
பன்னிரண்டாம் நாளில் பந்தக்கால் வெட்டல் அழகு.ஆத்மாவின் உடம்புக்குச் சிறப்பு,சிருங்காரம் கண்டு தெளிவு,காண்பதைக் குறிக்கும்,சுயம்வரம் அழகு,சிருங்காரம் வரும்போது ஐம்புலன்களும் அதன் அடக்கம் ஐவருக்கும் பஞ்சாலி பத்தினியாய் அவணியில் பேரெடுப்பு.
வேளாளர் குலத்தோர் கட்டும் கட்டுத் தோரணம்-அது
வினைமுட்ட வேதனைகள் இருப்பதைக் காட்டும்
பதின்நாலாம் நாள் செட்டி வேளாள குலத்தவர்களால் கட்டப்படும் தோரணம்.அபிமன்யு மாண்ட புத்திர சோகத்தில் அருச்சுனன் தீ மூட்டி இறக்கசவென்று மூட்டுகின்ற தீயைக் காட்டுவது போல் இருக்கும்.தோரணங் கண்டு தேத்தரசன்(அபிமன்யுவைக் கொன்றவன்)வெளிவர ,அர்சுனன் தேத்ரசனைக் கொல்வதாக இருக்கும் தோரணப் பூசை.
வனவாசத்தில்-ஒரு இலைவாசம் அது வதவாசம்.
பீமன் செய் கதளி வனமளிப்பு.
இலை,குழை உண்டு சாத்வீக குணமுள்ளோர் சாத்வீக உணவு மரக்கறி உண்போருக்கு போர்க்குணம் வீரமாய் ஒளிரும் போது,வீமன் செய் கதலி வனமளிப்பு வாழைக் குலைகள் வெட்டி வீழ்த்துவதும்,பழங்கள் கனிவகை ஒடித்து விடுவதும்,போரிலே நல்லவர்கள் மடிவதை உணர்த்தும் அது போர் என்றாலும்,சத்தியம் அங்கே சங்கமிக்கும்.ஆன்மாவானது மேல்நோக்கி உயர்ந்து செல்லும் போது மோட்ச காலத்தில் மிதமாக மிளிரும் அது முல்லை,முசுட்டை,காரை,கனாந்தி,பிரண்டை என ஐந்தும் ஐம் பூதங்களில் சாத்வீகத்தில் சங்கமிக்கும் சங்கதி வனவாசத்தில் காணலாம்.மேன்மக்கள் உணவு அது இறந்த தென்புலந்தோர் தோட்டமது.
அரசடி அம்மன் ஆலுயத்து
அரசமரத்திலொரு கொத்து
பீமன் வாள் மாறியதும் (தருமரிடம் வாங்கியதும்)அதே நொடியில் ஓடிச் சென்று,அரசடி அம்மன் ஆலயத்து அரசமரத்தில் ஒரு கொத்துச் செடி கொடிகள் பறித்து வந்து பாண்டவர்களிடம் கொடுப்பர்.அந்தக் கொத்துச் செடியிலுள்ள முல்லை,முசுட்டை,காரை,கனாந்தி,பிரண்டை என்ற ஐந்துமே மோட்ச இலைகளாகும்.அவற்றையே மறுநாள் பீமன் செய்து பாண்டர்களுக்கு கொடுப்பர்.இந்தச செயல் பாண்டவர்களின் விராடபர்வ அஞ்ஞான காலத்தில் பீமன் வல்லாளன் என்ற பெயரில் விராடமன்னரின் அரன்மனையில் சமயல்காரராகச் சேவை செய்ததைக் குறிக்கும்.
அஞ்ஞாத வாசமும் உண்டு
அது துரியோதனன் நாடுமாகும்மெய்ஞான விந்தையிது,விளக்கமும் விடுகதை
பாண்டவர் வனவாச காலத்திலே அஞ்ஞாத வாச காலம் மிகவும் விந்தையானது மாறு வேடத்தில் பாண்டவர்கள் பயந்தொடிங்கி வாழ்வது.ஆன்மாவானது கூனிக் குறுகிச் சென்று சிவத்தையடைவதை உணர்த்தும்.ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்திற்கு தென்மேற்கே நற்பட்டிமுனை சேனைக்குடியிருப்பு வரைச்செல்லும் பாண்டவ வனவாசம்.சேனைக்குடியிருப்பு காளி கோவிலையடைந்ததும் அங்கே வீரவிளையாட்டுக்கள் நடைபெறும்.பெலிகள் இட்டு தேவாதிகள் இரத்தம் சிந்திய போரின் உச்சக்கட்டம்,பேய் நிலையில் ஆன்மா ஈடுபட்டு இரத்தம் குடிப்பது பின் பேய் நிலை தளர்ந்து சரணாகதியடைவதும்,ஆன்மா கூனிக்குறுகும் நிலையைக்காட்டும்,காளி கோயில் பூசை வேள்வி முடிந்ததும் ஆலயத்தின் பின்னாலுள்ள வீதி வழியாக வயல் வெளியூடாக பாண்டிருப்பு பெரியகுளக்கட்டு வரையுள்ள வழிகள் அஞ்ஞாதகால விராட நாடு என எண்ணிக்கொண்டு வனவாசம் புறப்பட்டவர்கள் மௌனமாக வருவார்கள்.பின் குளக்கட்டை அடைந்ததும்,மேளம் ஒலிக்க மணிகள் ஒலிக்க ஆலயத்தை வந்தடைந்ததும் மறுநாள் தவநிலை நேரம் வரை அஞ்ஞாத வாசவிரதம் கடைப்பிடிக்கப்பட்டு உறக்கப்பூசை கண்டு,பின் ஆன்மாவானது சோர்வு நீங்கி பேரின்ப நிலையை அடைவதை தவநிலை உணர்த்தும்.
ஆன்ம ஈடேற்றம் அதற்கொரு மேடேற்றம்
தவநிலை உணர்தும்
ஆன்மாவானது ஓய்வு பெறும் முன் ஓய்வு நிலையை ஏற்படுத்த உடம்பானது இடமளிக்கின்றது.எத்தனை இடையூறு இன்ப துன்பங்களிலும் மனிதன் ஈடுபட்டாலும் தியானம்,தவங்கள் மூலம் ஆன்மாவுக்கு ஆறுதல் கொடுப்பது கர்மாக்களைச் செய்யும் உடம்புக்கு உரிய பண்பாகும் இதனை உணர்த்தவே அர்சுனன் பாசுபாஸ்திரம் பெறத் தவமிருக்கும் தவநிலை.தவநிலைக் காட்சி மிகவும் பக்தி பூர்வமாகச் செய்யப்படுகின்றது.ஆன்மா என்னும் அர்ச்சுனன் என்போனது உடம்பு நிலையை குரு தீட்சண்யம்,நாமம்,சொல்,செயல் தொழில் பாடு ஆகியவற்றால் புனிதப்படுத்தி தவநிலைக்கு தயார் படுத்துகின்ற பேரின்பக்காட்சி ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தில் கண்கொள்ளாக் காட்சி,அர்சுனரை ஆலயக்குருமார் வழி நடாத்தி செல்கின்றனர் சாதாரண மனிதனுக்கு(அர்சுனர் வேடம் பூண்டவருக்கு)ஆலய,நித்திய அனுட்டானங்களில் பரிபக்குவப்பட்ட குருமார் சேவகம் புரிவது தவறாகப்பட்டாலும் ஆலயச்சிறப்பிற்கு அது தேவசேவையாக இருக்கின்றது.
ஆஸ்தரண குருக்கள் அர்சுனருக்கு குருதீட்சன்யம்,நாமம்,சொல்,செயல்,தொழில்பாடு என்ற பஞ்சேந்திரியக்கிரிகைகளை,பார்த்தல்,தொடுத்தல்,அளைத்தல்,பிடித்தல்,நடக்க வைத்தல்,என்பதற்கேற்ப உச்சி முதல் உள்ளங்கால் வரை தொட்டழைந்து பணிவிடை செய்து தவநிலைக்கு கூட்டி வரும் போது,ஏனைய குருமார் தீபங்கள் குருமார் தீபங்கள் காட்டி,இருள் அகற்றி,ஒளி காட்டிச் செல்கின்ற மோனத்ததைக காணக் கண் கோடி வேண்டும்.
பேரண்டி என்றொரு அழகு பெண் பேரழகால் அருச்சுனனை மயக்கவென்று
மாயை செய்து தவங்குலைக்க வரும் சூது.
பேரண்டச்சி என்ற பேரழகி மோகத்தால் பார்த்தனை மன்டியிட வைக்கவென்று தோன்றுகின்ற சோதனையில் வென்று தவம் செய்யும் காரணத்தை அறியத்தரும் அருட்காட்சி அம்மா அது மெய்சிலிக்கும்,பார்ப்பதற்குபரவசமாய் அமையும்,காமத்தால் பெரும் பாலும் தவறுசெய்யும் உடம்பு எனும் வாகனத்தை ஆண்மா எனும் அருச்சுனன்,பரமாத்மா எனும் தெய்வத்தை காண்பதற்கு இழுத்துச் சென்று பேறுபெறும் காட்சி இது இறைமாட்சி.
பன்றி அது வரும் உனைக் கெடுக்க பற்றின்றி நீ இருந்தால் அது பறந்து விடும் சென்று விடும் பேறு வரும்.