இவ்வாலயம் ஆராச்சியாளர்களால் அணுகி ஆராயப்பட வேண்டிய பழமை வாய்ந்ததாகும்.ஆனால் மட்டக்களப்பின் சரித்திரத்தில் முக்கிய இடத்தைப்பிடிக்காத நிலையில் இக்கோயில் வரலாறு காணப்படுகிறது.அதற்குக் காரணம் இக்கோயில் வரலாற்றில் இரண்டு அரசர்கள் சம்பந்தப்பட்டிருப்பதேயாகும்.
இன்றைய சந்ததியினர் இதனை விளக்கமாக அறியும் பொருட்டு இதனைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.இவ்வாலய வரலாறு மிகத் தொன்மை வாய்ந்ததாக வாய்வழியே கூறப்பட்டு வந்தாலும் இன்றைய இக்கோயில் நிர்வாகத்தினர் கூட இதனைச் சரிவர அறியாமல் இருக்கின்றனர்.இதனை இன்றைய தலைமுறையினர் மட்டுமின்றி சந்ததியினரும் அறிந்துகொள்ளும் வண்ணம் இது ஆராய்ந்து அறிய வேண்டியதாகும்.
மாருத சேனனுடைய புத்திரன் எதிர் மன்னசிங்கன் மட்டக்களப்பு பகுதிக்கு சிற்றரசனாக இருந்த காலத்தில் சிதைவுற்ற சிவாலயங்களை செப்பனிட்டு ஆறுகாலம் பூசையும் புரிவித்துத் திக்கதிபதிகள் வைத்து அரசுபுரியுங் காலம் வட நாட்டுக் கொங்கு நகரில் இருந்து தாதன் என்னும் சமயப் பெரியார் வைஷ்ணவ மதத்தைப் பரப்பும் நோக்கங் கொண்டு மகாபாரதத்தோடு பல இதிகாசங்களையும் எடுத்துக் கொண்டு காவி மண்டல தாரியாய் வேடம் பூண்டு இலங்கை மட்டக்களப்பு பகுதியை வந்து சேர்ந்தார்.
இப்பெரியார் அந்நாளில் நாகர்முனை என்று பெயர் பெற்ற திருக்கோயில் சந்நிதியைக் கண்டு தரிசித்து அங்கேயே தங்கியிருந்து மகா பாரத இதிகாசத்தை அங்கேயே போதித்தனன்.இதை அறிந்த திக்கதிபரொருவர் எதிர் மன்னசிங்க நிருபனுக்கு அறிவித்தனர் எதிர் மன்னசிங்க நிருபன் திருக்கோவிலுக்குச் சென்று தாதனின் குலம் கோத்திரம்,நாமம் சுயநாடு இவைகளை விசாரித்தான்.
தாதனும் அரசனை நோக்கி அரசே என் குலம வசியன் என் நாமம் தாதன் எனது கோத்திரம் விஷ்னு எனது நாடு கோங்கு நகர் நான் பாண்டவர் குலத்துத் தருமாதியார்களுக்கு நாகர் குலத்துத் துரியோதனாதிகள் செய்த தீமைகளை காண்பிக்கும் படி வந்தேன் என்றான்.
எதிர் மன்னசிங்க மன்னனும் அதனை அறிய விரும்பினான் இது பற்றி விளக்கிக் கூறிய தாதன் மகாபாரதத்தில் சொன்ன படி பாண்டவர்கள் வனவாசம் செல்லுதல் பார்த்தன் சிவனிடத்தில் பாசுபதம் பெறுதல்,துரியோதணாதியாரைக் கொண்றதும் அரவாணைக் களப்பலி செய்ததும்,பின்பு அக்கினி குளித்து மீண்டும் இந்திரஸ்தம் அத்திபுரம் இவைகளை அரசு செய்ததுங் காண்பிக்க வேண்டும் அதற்குச் சமுத்திரக்கரை அருகும் ஆல விருட்சம் நிறையப் பெற்ற இடமும் அதற்கு அப்பால்,வனமும் இருக்கும் இடத்தில் தான் காண்பிக்க வேண்டும் என்று வேண்டினான்.
அரசனும் சம்மதமுற்று அனைவரும் கடலருகாய் வரும் போது இக்கிராமம் தாதன் வேண்டியபடி உரிய வசதிகளுடன் காணப்பட்டது.அந்த இடத்தில் பாண்டவருடைய உறுப்பை ஆறு பேருக்கு உண்டாக்கி அதனை நம்பும்படி தீ வளர்த்து அதிலிறங்கி மீண்டு காட்டினான்.அரசனும் மகிழ்ந்து ஆலயம் உண்டாக்கிப் "பாண்டுறுப்பு" எனும் நாமம் சூட்டி வங்கர் குலத்துத்திக்கதிபரே பரிபாலிக்கும் படி திட்டஞ்செய்து தன்னிருப்பிடம் சென்றான்.
"பாண்டுறுப்பு" எனும் நாமம் நாளடைவில் திரிந்து இப்போது "பாண்டிருப்பு" என வழங்குதலைக் காணலாம்.
இதுவே இக்கோயில் அமைந்த வரலாறெனலாம்.ஆனால் இது எக்காலம் ஆரம்பிக்கப்பட்டது என்பது அறியப்படவேண்டியதே!இதற்கு மூடுமந்நிரமாகப் போற்றப்படும் கல்வெட்டினைப்பார்ப்போம்.
தாதன் கல்வெட்டு
ஆரம்பத்தில் தாதனால் ஆரம்பிக்கப்பட்ட இக்கோயில் தாதன் கோயில் என்றே அழைக்கப்பட்டு வந்தது.இதே போன்று இவ்வாலயக் கல்வெட்டும் தாதன் கல்வெட்டு என்றே அழைக்கப்படலாயிற்று.
"மேவு பூவுலகில் திருமாலமைத்த வொழுங்கைப்பார்!
ஆமவு தாதன் பகுக்க மனத்திலுன்னி
அரியோன் பதத்தை அடிபணிந்து தெண்டனிட்டு
குருவின் கையில் குதித்தோர் சரித்திரத்தை
மடலில் வரைந்து மனத்தை ஒருப்படுத்திக்
கொடையில் சிறந்த குகனிடத்தில் செல்லவென்று
காவி உடுத்திக் கமண்டலமும் கைப்பிடித்து
ஆவி அடக்கி அஞ்செழுத்தை உச்சரித்து
பல்லோர் புகழப் பாருலகோர் ஈடேற
வில் விசையன் செய்தவத்தை மேன்மை பெறக் காசினியில்
பத்ததி போற்காட்டிப் பகுத்தறியத் தாதனுந்தான்
சுற்றம் மகிழத் துதித்தெழுந்து தென்னிலங்கை
சென்று மட்டுமாநகரில் திருக்கோயில்
சந்நிதியைக் கண்டு நமஸ்கரித்து கைகூப்பி நிற்கையிலே
பரத நாட்டிற் பிறந்தான் எனவறிந்து பார்வேந்தன்
இரத நடவீதி யென்னும் இடம் வரவழைத்து
எதிர்மன்ன சிங்கமென்னும் நரபதியும்
கதிதங்கும் இப்பதியில் கண்டதில்லை உந்தனைத்தான்
ஆர நீரறையும்......சுந்தரசேர்
பேரேது ஊரேது பெருமையுடனேதுமென்னத்
தாதன் மனமகிழ்ந்து தாரளந்த மாயவன்றன்
பாதம் பணிந்து பரிவுடன் ஓதுகின்றான்
கோங்கு நகர் மேவுங் கோவசியர் தன்குலத்தில்
பாங்குடனே நானுதித்துப் பாரதமென்றார் மதத்தை
வங்கம் கலிங்கம் மலையாள புத்திபுரம்
அங்கங்கு சென்று அரியோன் அடியார்க்குக்
காட்டிய பின் தென்னிலங்கைக் கலிங்கர் குலத்தோர்க்கு
கூடநினைவு கொண்டு துளசி மாலையிட்டு
வந்தேனெனது மரபிதென்ன மன்னவனும்
சந்தோஷமாகித் தாதன்றனைத் தழுவி
வடவால் நிறைந்திருக்கும் வனமும் கடலருகும்
அடவாகத் தேடி ஆழி அருகாய் வரவே
கண்டார்கள் ஆல் வனத்தை கடலுமருகிருக்க
தொண்டார் தாதன் துதித்து நமஸ்கரித்துப்
பஞ்சாட்சரத்தைப் பதித்து மனத்தொன்றாக்கிக்
கஞ்சன் முதலாக ஐவர் விந்தஞ் சேர்ந்தமட்டும்
தீட்டி ஒளியாக்கிக் தீவளர்த்துப்பாய்ந்த பின்பு
கரிவனையோ நம்பி சிறை கட்டுவதற்கு சட்டமுடன்
தீர்த்து எதிர்மன்னசிங்கன் மனம் மகிழ்ந்து
பார்த்தவர்கள் கொண்டாடப் பாரதத்திற் சொன்னபடி
கம்பம்,வனவாசம்,கடல்குளித்து தீப்பாய்தல்,
அம்புவில்லுத் தண்டுடனே ஐவர் கொலுவாக்கி வைத்து
ஆடலோடு பாடி ஆடி திரோபதிக்கு
மாடமுயர் கோயில் வரிசையுடன் இயற்றி
கும்பிட்டார்.தெண்டனிட்டார் குவலயத்தை காருமென்றார்.
தம்பட்டம் சல்லாரி தாரைசின்னஞ் சங்குதொனி
உடுக்குச் சிலம்பு மணி ஒளிதங்கு,தீபம் மெழ
அடுக்கு முறையோ டரவான் களப்பலியும்
பத்ததி போற்காட்டிப் 'பணிக்கன் குலத்தோர்க்கு'
உற்றபுகழ் மேவ உங்களுக்கே முன்னீடு
ஈந்தோனிலங்கை எங்குமுயர்ந்தோங்க
ஆய்ந்து பணி செய்கென் றகல மன்னப்பொழுது
பதினென் வரிசையோடு பத்தும் பதியுடனே
மதி வெண்ணொளி பரப்ப மாயோன் மதமோங்க
கண்டோர் களிகூரக் காசினியோர் கொண்டாட
என்றும் பாசிதமாயிப் பதியைப் பெற்றதினால்
ஆவினங்கள் வாழ அறமுயர்ந்து சாவி எழப்
பாவானர் பாடப் பல்லுரெல்லாம் வாழ்க!
மாத்தில் மூன்று மழை மட்டுநகர் பெய்துவர
என்றார் பணிக்கர் குலத்திப னேந்திடம்
கண்டறிந்து மாயவன் கருணைதனை யுண்மை யென்று
'விமலதரு மனென்' னும் வேந்தனாக மகிழ்ந்து
கமல விழிக் கண்ணன் கருணை தங்குமிப்பதிக்கு
வேண்டும் வயல் நிலமும் வெள்ளிக் களஞ்சியமும்
தூண்டு திகிழி தந்தம் சோதியெழ யீந்து மன்னன்
'கண்டி நகர்' சென்றான் காசினியோர் தாமறியப்
பண்டு முற்ற என்றென்றுர் காசினியோர் தாமறியப்
பண்டு முற்ற என்றென்றுர் பார்.
இதுதான் தாதன் கல்வெட்டு இதனை மூடி மறைத்து வைப்பதினால்,எம்மூர் மக்கள் இதனை அறியாததும் இதனால் பெறப்படும் பல உண்மைகளையும் அறிய முடியாமல் இருப்பதும் இயல்பே!இது பாண்டிருப்பில் வாழும் ஒவ்வொரு மகனிடமும் இருக்கவேண்டும்.
ஆகவேதான் இதனை இங்கு முழுமையாகத் தந்தோம் மேற் கூறிய வரலாற்றை இதில் கண்டு தெளிந்திருப்பீர்கள்.
இவ்வாலயம் எழும்பிய வரலாற்றுக் காலத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு இப்பாடலில் வரும் கண்டிமாநகரை ஆண்ட விமலதர்மசூரியன் என்னும் மன்னன் இவ்வாலயத்தின் அருமை பெருமைகளை அறிந்து இவ்வாலயத்துக்கு வந்து பரவசமடைந்து பல நிலபுலன்களும் பொன்,வெள்ளி,தங்கம்,தந்தம்,இரத்தினம் போன்ற பொருட்களை காணிக்கையாய் ஈந்து சென்றனன் என்பதனால் அறியக்கிடக்கிறது.கண்டி நகரை ஆண்ட விமலதர்மசூரியனின் ஆட்சிக்காலம் கி.பி.1594 முதல் கி.பி.1604ம் ஆண்டு வரை என்று பல ஆராய்ச்சி நூல்களால் அறியமுடிகிறது.ஆகவே இக்கோயில் இதற்கு முன்னர் எழுந்திருக்கவேண்டும் என்று துணிய இடமுண்டு.இதிலிருந்து இக்கோயிலின் பழமையை அறியலாம்.
இதனை மேலும் நிருபிக்கும் பொருட்டு எதிர்மன்னசிங்க மன்னவனின் ஆட்சிக்காலத்தை ஆராய்ந்தால் உண்மை புலப்படும்.எதிர்மன்னசிங்கனின் வரலாறு கூறும் பாடலின் அவன் முடிசூட்டிய பாடலில் பின்வருமாறு காணப்படுகின்றது.
'கார் தொலைப்பானென யிலங்கைக்
கனகமுடி மன்னரெல்லாங் களித்து வாழ்ந்ததக்
சீரி லங்கும் மட்டமெனுங் களப்பு நாட்டைச்
சிறந்த கலிபிறந்து நாலாயிரத்தறு நூற்று நாற்பாண்டில்
பார் செழிக்க முடிபுனைந்தான்.தோப்பாவைப்
பண்டதாக்கி பருதிகுலன் பவணியாய
தேரினிடம் வலந்திரிந்து செங்கோலாச்சு
மதிப்பவரசர் மரபனென்னும் எதிர்மன்னசிங்கன்தானே!
என்பது அப்பாடல் இதில் கலி பிறந்து 4640ம் ஆண்டில் மன்னன் எதிர்மன்னசிங்கன் முடி சூட்டி ஆட்சிபீடம் ஏறினான் என்றும் மேலும் அவனது சரித்திரம் மூலம் நாற்பத்தி நாலு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்றும் அறியக்கிடைக்கின்றது.இதனை உற்று நோக்கினால் இக்காலப்பகுதியில் இவ்வாலயம் இம்மன்னனால்கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று துனியலாம்.இது கி.பி.1539 முதல் கி.பி.1583 காலப்பகுதியாகும்.ஆகவே இவ்வாலயம் தோன்றிய காலத்தை இதிலிருந்து நிர்ணயித்து இதன் பழமையை அறிந்து கொள்ளலாம்.
எதிர்மன்னசிங்கனின் கடைசிக் காலமான 1570-80 களில் இது கட்டப்பட்டிருக்கலாம் என்றும் எண்ணினாலும்,விமலதருமசூரிய மன்னன் வந்து தரிசித்த அவனது ஆட்சிக் காலத்தை (கி.பி.1590-1604)நோக்குமிடத்து கிட்டத்தட்ட ஒத்திருத்தலைக் காணலாம்.ஆகவே விமலதருமசூரியன் காலத்துக்கு முன்பே கட்டப்பட்டது.என்று துணியலாம்.இது தெட்டத்தெளிவாக இவ்வரலாற்றில் காணப்படுகிறது.
இதனை மேலும் நிருபிக்கும் பொருட்டு எதிர்மன்னசிங்க மன்னவனின் ஆட்சிக்காலத்தை ஆராய்ந்தால் உண்மை புலப்படும்.எதிர்மன்னசிங்கனின் வரலாறு கூறும் பாடலின் அவன் முடிசூட்டிய பாடலில் பின்வருமாறு காணப்படுகின்றது.
'கார் தொலைப்பானென யிலங்கைக்
கனகமுடி மன்னரெல்லாங் களித்து வாழ்ந்ததக்
சீரி லங்கும் மட்டமெனுங் களப்பு நாட்டைச்
சிறந்த கலிபிறந்து நாலாயிரத்தறு நூற்று நாற்பாண்டில்
பார் செழிக்க முடிபுனைந்தான்.தோப்பாவைப்
பண்டதாக்கி பருதிகுலன் பவணியாய
தேரினிடம் வலந்திரிந்து செங்கோலாச்சு
மதிப்பவரசர் மரபனென்னும் எதிர்மன்னசிங்கன்தானே!
என்பது அப்பாடல் இதில் கலி பிறந்து 4640ம் ஆண்டில் மன்னன் எதிர்மன்னசிங்கன் முடி சூட்டி ஆட்சிபீடம் ஏறினான் என்றும் மேலும் அவனது சரித்திரம் மூலம் நாற்பத்தி நாலு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்றும் அறியக்கிடைக்கின்றது.இதனை உற்று நோக்கினால் இக்காலப்பகுதியில் இவ்வாலயம் இம்மன்னனால்கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று துனியலாம்.இது கி.பி.1539 முதல் கி.பி.1583 காலப்பகுதியாகும்.ஆகவே இவ்வாலயம் தோன்றிய காலத்தை இதிலிருந்து நிர்ணயித்து இதன் பழமையை அறிந்து கொள்ளலாம்.
எதிர்மன்னசிங்கனின் கடைசிக் காலமான 1570-80 களில் இது கட்டப்பட்டிருக்கலாம் என்றும் எண்ணினாலும்,விமலதருமசூரிய மன்னன் வந்து தரிசித்த அவனது ஆட்சிக் காலத்தை (கி.பி.1590-1604)நோக்குமிடத்து கிட்டத்தட்ட ஒத்திருத்தலைக் காணலாம்.ஆகவே விமலதருமசூரியன் காலத்துக்கு முன்பே கட்டப்பட்டது.என்று துணியலாம்.இது தெட்டத்தெளிவாக இவ்வரலாற்றில் காணப்படுகிறது.